திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் கடந்த வாரம் இரண்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை எல்லைப்பகுதியில் இந்த மதுக்கடைகள் இருப்பதால் சென்னையில் இருந்து ஏராளமான மதுப் பிரியர்கள் இங்கு படையெடுத்து வந்தனர்.
இதனால், உஷாரான காவல்துறையினர் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விஜய நல்லூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையை முடுக்கி விட்டனர். இதனால், உள்ளூர் வாகனங்கள் தவிர சென்னையில் இருந்து வந்த வாகனங்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே, அத்யாவசியப் பணிகளுக்காக சென்று வந்தவர்கள் மட்டும் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டு அனுப்பப்பட்டனர். ஆனால், பெரும்பாலானோர் சென்னையில் இருந்து மது வாங்க வந்தது உறுதி செய்யப்பட்டதால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக மது வாங்க குடையுடன் வந்த மதுப் பிரியர்கள் கூட காவல் துறையினரின் பிடியில் இருந்து தப்பவில்லை.
கடந்த ஐந்து நாள்களில் சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மது வாங்குவதற்காக வந்த மதுப் பிரியர்களின் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மது வாங்க பணம் தராத தாயைக் கொன்ற குடிகாரன்!