திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகேவுள்ள ஜங்களபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி விமலா. இவர்களது 17 வயதான மகள் அக்.17ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமானார்.
இது குறித்து அப்பெண்ணின் பெற்றோர் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர், இளைஞரையும், சிறுமியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர், சிறுமியின் தாயாரை காவல் நிலையத்திற்கு வரவழைத்த காவல் துறையினர், சிறுமி கடத்தப்படவில்லை என்றும் உறவினர் வீட்டில் தான் இருந்தார் என்றும் எழுதி கொடுத்துவிட்டு சிறுமியை அழைத்துச் செல்லுமாறு காவல் துறையினர் கூறியதாக தெரிகிறது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், சிறுமியை கடத்திச் சென்ற நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறை கூறியதுபோல் எழுதிகொடுக்க முடியாது என்று மறுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த காவல் துறையினர், சிறுமியை அனுப்ப முடியாது என்றும் காப்பகத்துக்கு தான் அனுப்புவோம் என்றும் கூறி தாயாரை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் தாய் தனது மகளை காவல் துறையினரிடமிருந்து மீட்டு கொடுக்க வேண்டும் என்றும் சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் புகார் மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.