திருவள்ளூர்: தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி, 8 தோட்டாக்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபகாலமாக இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் சில நாள்களுக்கு முன் பட்டியலினத்தவர்கள் குறித்து இழிவாக பேசியும் பட்டியலின இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் சினிமா துறையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மீரா மீது அடுக்கப்படும் புகார்
அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் மீரா மிதுனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சார்பில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் இன்று (ஆகஸ்ட் 9), மீரா மிதுனை கைது செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஸ்ரீதர் கூறுகையில், “ஒரு சில படங்களில் நடித்து, மாடலிங் தொழிலின் தவறான முன்னுதாரணமாக திகழும் நடிகை மீரா மிதுன், பட்டியலின சமூகத்தினரின் நன்மதிப்பை சீர் குலைக்கும் விதமாக பேசியுள்ளார்.
கைதாவாரா மீரா
மேலும் குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவர்கள் திருடர்கள், மோசம் செய்பவர்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், என பேசி உள்ளதால் எங்களது சமூகத்தினர் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர்.
எனவே சாதிய வன்கொடுமை உணர்ச்சியோடு சமுகத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசிய நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.
மேலும் காவல்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைநாட்டி நீதி கிடைக்க வழிவகை செய்யவேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தன்பாத் நீதிபதி கொலை: சிபிஐ விசாரணையை வாரந்தோறும் கண்காணிக்க உத்தரவு!