திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். நெசவுத் தொழிலை மட்டுமே நம்பி இவர்களது வாழ்க்கை நகர்ந்து வருகிறது.
இலவச வீட்டுமனை வழங்கக்கோரிய நெசவாளர்கள்:
கூலித் தொழிலாளிகளான இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு குடிநீர் மாசு ஏற்படுவதாக கூறி பெரும்பாலான சாயப்பட்டறைகளை இழுத்து மூடியதால் நெசவுத் தொழிலில் ஈடுபட முடியாத நிலைவுள்ளது.
தற்போது கரோனா ஊரடங்கின் காரணமாக நெசவு தொழில் முற்றிலும் முடங்கியதால் உணவுக்கும், வீட்டு வாடகை தரவும் முடியாமல் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர். இந்நிலையில் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆட்சியர் அலுவகம் முற்றுகை:
இந்நிலையில் இன்று (டிச.21) காலை 8 மணியளவில் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த நெசவாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நொடிந்த நெசவாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: பயிர் காப்பீடு தொகை: விடுபட்ட கிராமத்தை சேர்க்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு!