தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெறவுள்ளது. ஆளும் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதம் உருவாகியுள்ளது. அமைச்சர்கள் சிலர் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், சிலர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் கருத்து தெரிவித்தனர்.
சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அக்டோபர் 7ஆம் தேதி, அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சிறுவாபுரி முருகன் கோயிலிலும், பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திலும் வழிபாடு செய்து, தனது வேண்டுதலை நிவர்த்தி செய்தார்.
கோயிலுக்கு வருகை புரிந்த துணை முதலமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைமைக் கழகம் தெரிவித்திருந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகாத்மாவின் நினைவுகளை இன்றும் சுமக்கும் மதுரை...!