திருவள்ளூர்: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எத்திராஜுலு, பத்மபிரியா தம்பதி. இவர்களது மகன் விகாஷ் (26). சிவில் என்ஜினீயரான இவர் கரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்தே ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். வீட்டில் இருந்த போது சைக்கிளிங் நீண்ட தூரம் ஓட்டுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு ஏற்பட்டது. அதன்படி பூட்டான், கம்போடியா, இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டார். அதன்படி நேற்று (நவ.25) தனது பயணத்தை விகாஷ் சென்னையில் தொடங்கினார். ஆந்திரா செல்வதற்காக திருவள்ளூர் மாவட்டம் வந்தார்.
அப்போது அவர் கூறுகையில், "சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்து இரண்டு ஆண்டுகளாக ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தேன். கரோனா தொற்றின்போது வீட்டில் இருந்தே வேலை செய்து வந்தேன். இந்தத் தருணத்தை பயன்படுத்திக் கொண்டு நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி மேற்கொண்டேன்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க சைக்கிள் பயணம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த பயணம் மேற்கொண்டுள்ளேன். ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டர் வீதம் பயணம் சென்று பின்பு பாதுகாப்பான இடத்தில் தங்கி விடுவேன். மீண்டும் பயணத்தை மேற்கொள்வேன்.
சின்ன சின்ன பணிகளுக்காக செல்லும் மக்கள் கூட இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தவிர்த்து சைக்கிளில் அவர்கள் செல்ல வேண்டும். இதுவே எனது பயணத்தின் நோக்கம்" என்றார்.
இதையும் படிங்க: Bachelor of Naturopathy and Yogic Sciences study: விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு