திருநெல்வேலி: திருநெல்வேலியின் மேலப்பாளையத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும், கிரிக்கெட் போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான இறுதிப்போட்டி, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியின் இளைஞர்கள், தங்களது வெற்றியினை மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டாடவேண்டும் என நினைத்துள்ளனர. இதனைத் தொடர்ந்து தங்களது நண்பர் ஒருவர் மூலமாக, மேலப்பாளையத்தைச் சேர்ந்த Peace என்ற தனியார் ஆம்புலன்ஸுகளை வரவழைத்துள்ளனர்.
வாகன ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு
பின்னர் அதில் வெற்றிக் கோப்பையை வைத்து, அணி வீரர்களோடு சைரனை ஒலிக்கவிட்டு மைதானத்தில் வலம் வந்துள்ளனர். இது தொடர்பான காணொலிக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸை, இளைஞர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு பயன்படுத்தியதைக் கண்ட பொது மக்கள் சமூகவலைதளங்களில் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில் காணொலி வைரலானதைத் தொடர்ந்து, மேலப்பாளையம் காவல்துறையினர் 4 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மன வளர்ச்சி குன்றிய பெண் பாலியல் வன்புணர்வு - இளைஞர் அதிரடி கைது!