திருவள்ளூர் மாவட்டம், காரனோடை பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கு நிழற்குடை அமைத்து அதனைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக காரனோடை பேருந்து நிலையத்தில் விழா மேடை அமைக்கப்பட்டு ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் அதனைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியை ஒட்டி, காரனோடை பேருந்து நிலையம் விழா மேடையாக மாற்றப்பட்டிருந்தது. மேலும் பொது விழாக்கள் நடத்த அனுமதி மறுப்பு, பேனர்கள் வைக்கத் தடை போன்ற நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறக்கவிடப்பட்டு இங்கு விதிமீறல் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், 144 தடை உத்தரவுச் சட்டத்தையும், கரோனா பரவலைத் தடுக்கும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சரும் அக்கட்சியினரும், விதிகளை மீறி செயல்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.