திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்கள், விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இங்குள்ள வார்டுகளில் பெண் நோயாளிகள், குழந்தைகள் என தனித்தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், மருத்துவமனை வளாகத்திற்கு பின்புறம் கஞ்சா போதையில் திளைக்கும் கும்பல் மருத்துவமனைக்குள் நுழைந்து பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவருகிறது.
இது குறித்து நோயாளிகள் கூறுகையில், "நோயாளிகளுடன் பாதுகாப்புக்காக இருக்கும் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர். அதன்பின், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடமும் அங்குள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறையிலும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் உள்ளிட்ட பெண் ஊழியர்களும் கஞ்சா போதை கும்பலின் அட்டகாசத்தால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், நள்ளிரவுக்கு மேல் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து அட்டூழியம் செய்யும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நோயாளிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கஞ்சா கும்பலால் கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட பொறியியல் மாணவர் உடல் மீட்பு