திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட பெரியபாளையத்தில் புனித பெரியநாயகி மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் 40 பட்டியலின குடும்பங்களைச் சேர்ந்தவர் மக்கள் இந்து மதத்திலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறி உள்ளனர். இந்த பேராலயத்தின் பங்கு தந்தையாக டி. அருள்ராஜ் என்பவர் உள்ளார்.
இந்த பேராலயத்தின் கட்டுப்பாட்டில் செயின்ட் ஜோசப் பள்ளியும், கன்னிகைப்பேர் பேர் கிராமத்தில் உள்ள புனித சகாய மாதா ஆலயமும் இயங்கி வருகிறது. சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் இங்கு வந்து செல்வது வழக்கம். சென்னை மயிலை உயர் மறை மாவட்டத்தின் கீழ் இயங்கும் இந்த ஆலயத்திற்கு சொந்தமாக சுமார் 50 ஏக்கர் நிலம் இருந்தது.
இந்த நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்தும், விற்றும் உள்ளனர். இதனால் இப்போது 20 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு புதிய பங்குத்தந்தையாக அருள்ராஜ் பொறுப்பேற்ற பிறகு, இந்த முறைகேடுகளை கண்டுபிடித்து திருச்சபையின் மேல் இடத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் திருச்சபையின் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட ஆலய நிலத்தினை வருவாய்த்துறையினர் மூலம் அளவீடு செய்யும்போது ஆக்கிரமிப்பாளர்களால் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்பின் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் பங்குத் தந்தை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதனிடையே ஆலய மேலிடம் முறையான விசாரணை நடத்தாத நிலையில், பங்கு தந்தையையும் பங்கு தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ள செயிட்ன் ஜோசப் பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இந்து மதத்தைச் சேர்ந்த 12 பேரையும் பணியில் இருந்து விடுபடுமாறு வலியுறுத்தியது.
இதனால் அதிருப்தியடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி வாயில் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசுவதற்காக பங்கு மக்கள் சுமார் 25 பேர் பெரியபாளையத்தில் இருந்து சென்னை மயிலை சாந்தோமில் உள்ள பேராயர் இல்லத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமியை சந்திப்பதற்காக சுமார் 2 மணி நேரம் இல்லத்தின் வாயிலில் காத்திருந்தனர். ஆனால் 2 மணி நேரத்திற்கு பிறகு வந்த முதன்மை குரு ஸ்டான்லி செபாஸ்டின், நீங்கள் யாரும் பங்கு மக்கள் கிடையாது என்றார்.
அப்போது மறுப்பு தெரிவித்து அவர்கள், நாங்கள் பங்கு மக்கள்தான் என்று தங்களது அடையாள அட்டையை காண்பித்துள்ளனர். இருப்பினும் அவர்களை உள்ளே விடமால் திருப்பி அனுப்பினார். இவர்கள் அனைவரும் பட்டியலின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒற்றுமை எண்ணத்தோடு இருந்தால் நாடு அமைதி பூமியாக திகழும் - முதலமைச்சர் ஸ்டாலின்