திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அமிர்தம். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், கடந்த எட்டு மாதங்களாகவே இவரை ஊராட்சி மன்றத் தலைவராக பணி செய்ய விடாமல் துணைத் தலைவர் ரேவதி விஜயகுமார் மற்றும் ஊராட்சி செயலர் சசிக்குமார் ஆகியோர் தடுத்து வந்துள்ளனர்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி தொடக்கப்பள்ளியில் கொடியேற்ற ஊராட்சி மன்ற தலைவருக்கு தலைமையாசிரியர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, அங்கு சென்ற அவரை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பிற அலுவலர்கள் தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தி ஈடிவி பாரத்தில் வெளியானது.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தி சேகரிக்க தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் எழில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் விஜயகுமார் மற்றும் ஊராட்சி செயலர் சசிக்குமார் ஆகியோர் செய்தியாளரை தாக்கி அவரது செல்போனை பறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் பூட்டி சிறை வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் செய்தியாளரை மீட்டனர். காவல்துறையினர், வருவாய்த்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது, "தற்போது இரண்டு பேர் மீது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: அண்ணா அறிவாலயத்தில் திரண்ட ஸ்விக்கி ஊழியர்கள்!