திருவள்ளூரில் இருந்து வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளின் சேவை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அந்த மார்க்கத்தில் போதிய வருவாய் இல்லை என போக்குவரத்து பணிமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வழித்தடத்தில் பேருந்தை இயக்கக் கோரி திருவள்ளூரை அடுத்த கொப்பூர், அரண்வாயல் குப்பம் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியல் நடத்தினர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
இது குறித்து இந்த கிராமத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கூறும்போது, "எங்கள் கிராமம் வழியாக பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த பேருந்து தடம் எண் 160 பியின் சேவை, கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், மருத்துவமனைக்கு செல்லும் முதியவர்கள் என அனைவரும் பல கிலோ மீட்டர் நடந்து செல்லும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அந்த பேருந்தை மீண்டும் இயக்க கோரி பலமுறை போக்குவரத்து நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.
மேலும் படிக்க: தீபாவளி பண்டிகைக்காக 12,575 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!