திருவள்ளூர்: திருத்தணியில் பாஜக வேல் யாத்திரையின்போது காவல் கண்காணிப்பாளர் சட்டையை பிடித்த பாஜக நிர்வாகி கைதுசெய்யப்பட்ட சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், இரண்டு தினங்களுக்கு முன்பு அனுமதியின்றி பாஜக சார்பில் வேல் யாத்திரையை மாநில தலைவர் எல்.முருகன் தொடக்கி வைத்தார். அப்போது காவல் துறையினர் அவர்களை கைதுசெய்து, எல். முருகன் உள்பட தொண்டர்கள் அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.
அப்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள், போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கு இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் சட்டையை பிடித்து இழுத்த காணொலி, சமூக வளையதளத்தில் வேகமாகப் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சூழலில், காவல் கண்காணிப்பாளர் சட்டையை பிடித்து தள்ளிய, காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் செல்வகுமார் என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வகுமார் பாஜகவின் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் என தெரியவந்தது
அவருடன் இருந்த மேலும் 13 பேர் மீதும் காவல்துறையினர் பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக திருத்தணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் கைதுசெய்யப்பட்ட செல்வகுமாரை சிறிது நேரத்திலேயே விடுவித்துள்ளது காவல் துறை. காவல் கண்காணிப்பாளர் சட்டையைப் பிடித்த பாஜக நிர்வாகி கைதுசெய்யப்பட்டு, சிறிது நேரத்திலேயே வெளியே வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.