திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்- சிவசக்தி தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று தெரிகிறது. திருவள்ளூர் அடுத்த எரையூர் கிராமத்தில் உள்ள தர்காவில் பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று அக்கம் பக்கத்தினர் கூறியதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் திருவள்ளூர் தேரடியிலிருந்து ஆட்டோவில் எரையூருக்கு புறப்பட்டனர்.
அதே ஆட்டோவில் 30 வயது மதிக்கத்ததக்க பெண்மணி ஒருவரும் ஏறியுள்ளார். அந்த பெண்மணி தானும் எரையூர் செல்வதாகக்கூறி தம்பதியினரிடம் நட்பாக பேசியுள்ளார். அவர்களுடனேயே தர்காவுக்கு சென்ற பெண்மணி, அங்கு இரவு நேரமானதும் தம்பதி உள்ளிட்ட சிலருக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளார். உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவசக்தி உள்ளிட்ட 5 பேர் மயக்கமடைந்துள்ளனர்.
அப்போது அந்த பெண்மணி சிவசக்தி அணிந்திருந்த 13 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்றுவிட்டார். இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற பெண்மணியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், தம்பதியிடம் நட்பாகப் பழகி தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற பெண்மணி, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஜமுனா(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆந்திராவுக்கு சென்ற தனிப்படை போலீசார், ஜமுனைவை கைது செய்தனர். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவனை கடத்தி தாக்கிய வழக்கு: 9 மாணவர்கள் கைது