திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் கிராமத்தில் உள்ள புதுப்பட்டு கிளை இந்தியன் வங்கியை ஒட்டியுள்ள ஏடிஎம் மையத்தில் அதிகாலை 3 மணி அளவில், அடையாளம் தெரியாத கும்பல் உள்ளே புகுந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, மின் இணைப்புக் கம்பிகளை கட்டர் மூலம் துண்டித்தும், அதில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளை அகற்றியும் சேதப்படுத்தினார்கள். அப்போது அதிலிருந்து எச்சரிக்கை அபாய ஒலி எழும்பியதால், அதிர்ச்சியடைந்த மர்ம கும்பல் ஏடிஎம் மையத்தில் இருந்து தப்பி ஓடியது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் வந்து பார்த்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மப்பேடு காவல் துறையினர் கைரேகை மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் உதவியுடன் ஏடிஎம் மையத்தில் இருந்த தடயங்களைச் சேகரித்தனர். பின், இந்தக் கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏடிஎம் மையத்தில் அதிகாலையில் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பன்னூரில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாகவும், இதனால் ஏடிஎம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாவலர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்கிம்மர் மூலம் ஏடிஎம் திருட்டில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பல்: முக்கிய குற்றவாளி கைது!