சென்னை: வரும் பிப்ரவரி 1-ந் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு தரப்பினரிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. பொதுவாக நடுத்தர மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பது வருமான வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்துவது தான். மாதாந்திர சம்பளதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது இதனை எதிர்பார்ப்பார்கள். அதே போல் இந்த ஆண்டும் நடுத்தர மக்களிடம் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு தொடர்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தற்போதுள்ள வருமான வரி விகிதம் (புதிய திட்டத்தின் படி) பற்றிய விவரம் வருமாறு:
வருவாய் | வருமான வரி | கூடுதல் வரி |
---|---|---|
ரூ. 3,00,000 வரை | இல்லை | இல்லை |
ரூ. 3,00,001 - ரூ.7,00,000 வரை | 5% (ரூ.3,00,000-க்கு மேற்பட்ட தொகைக்கு) | இல்லை |
ரூ.7,00,001 - ரூ.10,00,000 வரை | ரூ.20,000 + 10% (ரூ.7,00,000-க்கு மேற்பட்ட தொகைக்கு) | இல்லை |
ரூ.10,00,001 - ரூ.12,00,000 வரை | ரூ.50,000 + 15% (ரூ.10,00,000-க்கு மேற்பட்ட தொகைக்கு) | இல்லை |
ரூ.12,00,001 - ரூ.15,00,000 வரை | ரூ.80,000 + 20% (ரூ.12,00,000-க்கு மேற்பட்ட தொகைக்கு) | இல்லை |
ரூ.15,00,001 - ரூ.50,00,000 வரை | ரூ.1,40,000 + 30% (ரூ.15,00,000-க்கு மேற்பட்ட தொகைக்கு) | இல்லை |
ரூ.50,00,001 - ரூ.1,00,00,000 வரை | ரூ.1,40,000 + 30% (ரூ.15,00,000-க்கு மேற்பட்ட தொகைக்கு) | 10% |
ரூ.1,00,00,000-க்கு மேல் | ரூ.1,40,000 + 30% (ரூ.15,00,000-க்கு மேற்பட்ட தொகைக்கு) | 15% |
இந்நிலையில், டாலருக்கு நிகரான இந்திய மதிப்பின் வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றுக்கு இடையே பிப்ரவரி 1-ந் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் தனி நபர்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு குறித்தும் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு பட்ஜெட்டில் தனி நபர் வருமானத்திற்கான வரி விலக்கு உச்சவரம்பில் சில மாற்றங்கள் ஏற்படலாம் அல்லது கடந்த ஆண்டு அறிவிப்பில் சில திருத்தங்கள் கொடுக்கலாம். மேலும் மத்திய அரசு ஏற்கனவே வரி வருவாய் குறைவாக பெற்று வருகிறது. நேரடி வரி பெறுவதில் இரண்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் இன்னும் வரி சலுகை கொடுத்தால் அரசின் வருவாய் மேலும் குறையும். அரசு ஏற்கனவே அதிக கடன் பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.
கடன்களுக்காக ஆண்டிற்கு அரசு செலுத்தும் வட்டி மட்டுமே ரூ.11.63 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ஆண்டு செலவீனம் ரூ.48.21 லட்சம் கோடி இதில் வருவாய் ரூ.31.29 கோடி மட்டுமே. இதில் வருவாய் பற்றக்குறை மட்டுமே ரூ.16.13 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மேலும் நிதி பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 80% ஆக உள்ளது. மாநில அரசின் கடன் பகிர்வு குறைவான அளவு இருந்தாலும் மத்திய அரசு மட்டுமே 60% கடன் பெற்றுள்ளது.
தனிநபர் வருமானத்திற்கான வரியை குறைப்பதற்கான திட்டம் மத்திய அரசிடம் இருக்காது என தோன்றுகிறது. மேலும் தனி நபர் வருமானத்திற்கான வரியை குறிப்பதற்கு பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரி சலுகையை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி சலுகை வழங்கியது. ஆனால் அவர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் வரி சலுகையை மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் கடன் சுமையை குறைக்க வெளிநாடுகளில் இருப்பது போல் செல்வவரியை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். அதிக சொத்து வைத்திருப்பவர்களிடமிருந்து 1% சதவீதம் வரியை மத்திய அரசு வசூல் செய்யலாம். நான்கு வருடங்களுக்கு முன்பாக இந்திய வருவாய் அதிகாரிகள் (IRS) அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் 2 சதவிகிதம் வரி போட்டால் எவ்வளவு வருமானம் வரும் அதிலிருந்து என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம்? என்பது குறித்து குறிப்பானையும் அரசிடம் கொடுத்துள்ளனர்.
மத்திய அரசு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 11 சதவிதம் மட்டுமே வரியாக பெறுகிறது. மாநில அரசுகளின் வரியையும் சேர்த்தால் 16-17 % வரி வருவாயாக இருக்கும். ஆனால் மற்ற நாடுகளில் உற்பத்தி வரி குறைந்தபட்சம் 40% வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு பெற்ற ரூ.16 லட்சம் கோடி கடனில் ரூ.5.8 லட்சம் கோடி வருவாய் செலவினத்திற்காக செலவு செய்து வருகிறது. இதுபோன்ற திரும்ப பெற முடியாத திட்டங்களுக்கான செலவை மத்திய அரசு குறைத்து வருவாய் வரக்கூடிய முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் ஜிஎஸ்டி-யில் சாதாரண மக்கள் பயனடைய வகையில் வரிகளை குறைத்தால் நேரடியாக சாதாரண மக்கள் பயனடைவார்கள். சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியை குறைத்தாலே மக்கள் நேரடியாக பலனடைவார்கள. எனவே மத்திய அரசு வருவாய் செலவினங்களுக்கான செலவை குறைத்து மக்கள் நேரடியாக பயன்படக்கூடிய திட்டங்களில் கவனம் செலுத்தினால் தனிநபர் வருமானத்தின் உச்சவரம்பை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது.
இவ்வாறு பேராசிரியர் ஜோதி சிவஞானம் தெரிவித்தார்.