சென்னை: திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றி உறவில் ஈடுபட்ட இளைஞருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் பொன்சாமுவேல். இவர் புரசைவாக்கத்தை சேர்ந்த இளம் பெண்ணை (குற்றம் நடந்தபோது சிறுமி) திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகியுள்ளார். மேலும் யாருமில்லாத நேரத்தில் பெண்ணின் வீட்டிற்கு சென்று தொடர்ந்து பல முறை பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், உறுதியளித்த படி திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார்.
இது தொடர்பாக பெண்ணின் தாய் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு புகார் அளித்தார். குற்றம் நடந்த போது பெண் 18 வயதை எட்டாததால் புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறை பொன்சாம்வேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.
இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவ கொலை வழக்கு...குற்றவாளி வினோத்துக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!
இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி ஜே.ஸ்ரீதேவி, ''வழக்கில் போக்சோ பிரிவின் கீழ் உள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே பொன்சாமுவேல் குற்றவாளி என தீர்மானிக்கப்படுகிறது. அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், அபராதத் தொகையில் 20 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும். மேலும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்'' என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
குற்றவாளி தரப்பில் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்ததையடுத்து தண்டனையை ஒரு மாதம் நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.