திருவள்ளூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் புத்தர் உடற்பயிற்சி கூடத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் சிறுவர் எழுச்சி மன்ற மாநில செயலாளருமான சீனிவாசனின் தாயார் பரிபூரணத்தின், 16ஆம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்விற்கு வருகை தந்தார். நினைவேந்தலின் முக்கிய நிகழ்வாக பரிபூரணம் அம்மையாரின் படத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஆதிதிராவிட பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பெற்று பல ஆண்டுகளாக சிக்கலில் உள்ளது. சுவருக்கு அப்பால் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலுக்கு இவர்கள் யாரும் வந்து விடக்கூடாது.
தீண்டாமைச்சுவரை அகற்ற வலியுறுத்தல்: அங்கு நடைபெறுகிற விழாக்களுக்கு பட்டியலின மக்கள் வந்து விடக்கூடாது என்கிற எண்ணத்தில் ஒரு சிலர் திட்டமிட்டு அந்தச் சுவரைக் கட்டி இருக்கிறார்கள். அதை இடிக்க வேண்டும் என்று தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் அக்கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இது இந்த அரசுக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய ஒருவராக இருக்கிறது. ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும். அந்தச் சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். நடைபெற உள்ள குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டிருக்கிறார்.
குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான போட்டியா இது? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளித்திருக்கிறோம். பாரதிய ஜனதா கட்சி மற்றும் சங்பரிவார் அமைப்புகள் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த திரவுபதி மர்முவை வேட்பாளராக அறிவித்து விட்டு, நீங்கள் எல்லாம் சமூகநீதி பேசுகிறீர்கள்? பழங்குடி பெண்மணிக்கு ஏன் வாக்களிக்கத் தயங்குகிறீர்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.
வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி அல்ல. குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான போட்டி. இது பாஜக, சங்பரிவார் என்கிற வெகு மக்கள், விரோத பாசிச அமைப்பின் கருத்துக்கு அல்லது கோட்பாட்டுக்கு எதிரான ஒரு போராட்டம் தான் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து இருக்கிற போராட்டம். திரவுபதி முர்மு, யஸ்வந்த் சின்ஹா என்கிற இரண்டு தனிப்பட்ட வேட்பாளர்கள் இடையிலான போராட்டம் அல்ல.
இது யுத்தம் அல்ல. இது சனாதன சக்திகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் இடையிலான போட்டி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் சங்பரிவாரினை உருவாக்கி இருக்கும் கோட்பாட்டிற்கும் இடையிலான ஒரு கோட்பாட்டு யுத்தம் என்றே இதை நாங்கள் பார்க்கிறோம்.
எனவே, எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கிற யஸ்வந்த் சின்ஹா அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்கான ஒரு பிரதிநிதியாகவே வேட்பாளராகவே எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்துவோம் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
ஆதிதிராவிட மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்: ஆதிதிராவிட பொதுமக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வீட்டு மனை நிலத்தை அளந்துவிட்ட சூழலில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிய வாத சக்திகள் திட்டமிட்டு அவர்களை அங்கு குடியேறவிடாமல் தடுக்கிறார்கள். வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மரங்களை வெட்டி போடுகிறார்கள். வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அலுவலர்களை தாக்கியிருக்கிறார்கள்.
சிறைப்பிடித்திருக்கிறார்கள். வெளிப்படையாக பட்டப்பகலில் மரங்களை, பெரிய பெரிய புளிய மரங்களை 50 ஆண்டு, 60 ஆண்டு ஆயுள் உள்ள புளிய மரங்களை வெட்டிப்போட்டு சாலை மறியலில் ஈடுபடுவது அரசுக்கு விடுத்த சவால். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிட பொதுமக்கள் அங்கே வீடு கட்டி குடியேறுவதற்கு உரிய பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
மேல்நல்லாத்தூர் அருகே கேட்டர்பில்லர் கம்பெனி நிறுவனம் அங்குள்ள குளத்தைச்சுற்றி வளைத்து வேலி அமைத்து இருக்கிறது. அந்த வேலியை அப்புறப்படுத்தி அல்லது சுற்றுச்சுவரை அப்புறப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அந்த குளம் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு அதிலும் தலையிட வேண்டும்.
அந்த சுற்றுச்சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வேண்டும் என்றே இஸ்லாமிய சமூகத்தை சீண்டிப் பார்க்கிறார்கள். இஸ்லாமியர்களை வீதிக்கு வர வைத்துக்கொண்டிருப்பதன் மூலம், இஸ்லாமியர்களுக்கு எதிராக அப்பாவி இந்துக்களையும் வீதிக்கு வைக்க முயற்சிக்கிறார்கள்.
தொடரும் இந்து - இஸ்லாமியப் பிரச்னை: இந்தியாவில் மீண்டும் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஒரு மதம் உருவாக வேண்டும். அது 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு பயன்படும் என்று கணக்குப்போட்டு செய்கிறார்கள். இது வன்மையான கண்டனத்திற்குரியது. குடியரசுத்தலைவர் தேர்தலுக்காக அவர்கள் சிவசேனாவை உடைக்கிறார்கள்.
குதிரைபேரம் செய்து சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் கவுகாத்தி போன்ற இடங்களில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் மராட்டியத்தில் நடக்கிற அரசியல் சித்து விளையாட்டு. அனைத்தும் பாரதிய ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்புகளால் இயக்கப்படுகின்றன என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
டெல்லி காவல் துறை, அதாவது உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை இரண்டு நாட்களுக்கு முன்பு முகமத் ஜுபைர் என்பவரை கைது செய்து சிறைப்படுத்தி இருக்கிறது. அவர்கள் ஷர்மா பேசிய பேச்சை தன்னுடைய இணையதளத்தில் பதிவு செய்தார் என்பதுதான் அதற்கு காரணம்.
ஆனால், 2018ஆம் ஆண்டில், இந்துக்களை புண்படுத்தும் வகையில் பதிவு செய்தார் என்று ஒருவரின் படத்தை வைத்து அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவையெல்லாம் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு ஒடுக்குமுறை போக்காக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
வன்முறை வெறியாட்டம்: அதேபோல ராஜஸ்தானில் உதவிபுரிய கன்ஹையா லால் என்ற ஒரு இந்து, கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இது எந்த வகையிலும் இஸ்லாம் சமூகத்திற்கு நல்லதல்ல; ஏற்புடையதல்ல. இத்தகைய போக்கு தவிர்க்கப்படவேண்டும்.
அலுவலர்கள் சட்டப்பூர்வமாக கடமையாற்ற முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் இஸ்லாமியர்கள் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். குஜராத் படுகொலை என்று சொல்லக்கூடிய அளவுக்கான ஒரு கொடூரம் அரங்கேறியது. அப்போது மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார்.
அவருக்கும் அந்த வன்முறை வெறியாட்டத்திற்கும் தொடர்பு இருப்பதாக அன்றைய டிஜிபி மற்றும் ஐபிஎஸ் அலுவலர் சஞ்சீவ் பட் ஸ்ரீகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல் மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா சேதல்வாத் என்பவரும் அவருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். இப்போது அந்த மூவரையும் மோடி அரசு தூண்டுதலின் பெயரில் கைது செய்திருக்கிறார்கள் என்பது கண்டிக்கத்தக்கது.
அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம்: இதை வன்மையாக விடுதலைச் சிறுத்தைகள் கண்டிக்கிறது. இரட்டைத் தலைமை, கூட்டுத்தலைமை என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அதிமுகவுக்கு பாஜக தலைமை கூடாது. அது அதிமுகவுக்கும் நல்லதல்ல. வேலைவாய்ப்பின்மை குறித்து போராடுகிறவர்களை யாரும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று சுருக்கிப் பார்த்துவிட முடியாது.
அது பெரும்பான்மை இந்து இளைஞர்களை, இந்துக்களின் பாதுகாப்பு அரண் என்று பாஜக அரசை சொல்லிக்கொள்கிற வகையில் அந்த பாஜக அரசுக்கு எதிராக இந்துப்பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் தான் போராடுகிறார்கள் என்று தெரிந்து இந்த அரசு மக்களுக்கு விரோதமான அரசு என்பதை புரிந்துகொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியருக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் மாணவிகள்!