திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியானது ஐந்து ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியாகும். குறிப்பாக பழவேற்காடு ஊராட்சியில் மீன் மார்க்கெட், காய்கறி அங்காடி, பழக் கடைகள், மளிகைக் கடைகள் கொண்ட பெரிய அளவிலான சந்தை இயங்கிவருகிறது.
இந்தச் சந்தைக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். இதனால் எந்த நேரமும் கூட்ட நெரிசலுடனே இந்தச் சந்தை காணப்படும்.
இந்த பழவேற்காடு சந்தைப் பகுதியில் கரோனா தொற்று பிறருக்குப் பரவும் இடர் இருப்பதால் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பழவேற்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி சரவணன் தலைமையில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் வாரத்தில் புதன், சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் பழவேற்காடு சந்தையை முழு கடையடைப்பு செய்வது என்றும் முற்றிலும் மீன் மார்க்கெட் வியாபாரம் தடைசெய்யப்படும் என்றும், முகக் கவசம் இன்றி நடமாடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் பழவேற்காடு சந்தைப் பகுதி வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தீர்மானம் குறித்தான பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பழவேற்காடு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரவி, ஊராட்சி செயலாளர் கோபால், வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாகிகள் எனப் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க... ஊரடங்கினால் முகத்துவாரப் பணிகள் தொடங்க தாமதம்!