சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் தண்ணீர் லாரி மற்றும் சரக்கு வாகனங்களை இயக்கும் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு உதவி ஆணையர் ஜெயகரன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போக்குவரத்து இணை ஆணையர் லட்சுமி, சரக்கு லாரி மற்றும் தண்ணீர் லாரி ஓட்டுனர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், இருசக்கர வாகனங்கள்தான் பெரும்பாலான விபத்துகளில் சிக்குகின்றன. இவற்றைக் குறைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனினும் விபத்துகள் புதிய முறையில் ஏற்படுகின்றன. எனவே கனரக வாகன ஓட்டுநர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
அவர்கள் பெரும்பாலும் சாலை விதிகளை பின்பற்றுவது கிடையாது. சாலை விதிகளை பின்பற்றாமல் விபத்து ஏற்படுத்தினால் அதுவும் ஒரு கொலை போன்றதுதான். அதேபோல சாலை விதிகளை பின்பற்றாமல் தானாக விபத்தில் சிக்கி உயிரிழந்தால் அது தற்கொலைக்குச் சமமாகக் கருதப்படும். எனவே சாலை விதிகளைப் பின்பற்றி விபத்தில்லா தமிழ்நாட்டை மாற்ற உறுதுணையாக இருக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.