திருவள்ளூரை அடுத்து ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் குபல்வார் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மதிலாரமா (37). இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரின் நண்பரான அத்தங்கி காவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு கடனாக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பிரபாகரன் திரும்ப அளிக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் மதிலாரமாவின் கணவர் இறந்துவிட்டதால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் 8 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகார் கொடுத்து எட்டு மாதங்கள் ஆகியும் புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் திருவள்ளூர் பகுதிகளில் கோவில், பள்ளிக்கூடம் நடைபாதையில் தங்கி தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நடந்து வந்து விசாரித்து வந்துள்ளார். இந்த நிலையில் குற்றப்பிரிவு காவல் துறையினர் தன்னை 8 மாதங்களாக அலைக்கழிப்பதாகவும் பிரபாகரன் தரப்பு மற்றும் அவரது வழக்கறிஞர் சொல்வதை மட்டுமே கேட்டு தனக்கு வர வேண்டிய பணத்தை பெற்று தராமல் தன்னை அலட்சியப்படுத்துவதாகவும் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த அப்பெண்ணை காவல்துறையினர் மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:"தமிழகத்திற்கு வழக்கம் போல் ஏமாற்றமே" - பட்ஜெட்டில் குறித்து மு.க. ஸ்டாலின்