திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தனது வாகனத்தில் எப்போதும் பிஸ்கட், பழங்கள், ரொட்டிகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபடுவார். அப்போது, சாலையில் உணவின்றி தவித்துவரும் நாய்கள், குரங்குகள், மாடுகள் ஆகியவற்றிற்கு உணவளித்துவருகிறார். அவரது வாகனத்தை கண்டாலே தெரு நாய்கள் ஓடிவருகின்றன. அந்த நாய்களுக்கு பசியாற்றி அதில் மகிழ்ச்சியைத் தேடிக்கொள்கிறார்.
இது குறித்து நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார் கூறுகையில், “மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில் ஏழை மக்கள், பழங்குடியின மக்கள் ஆகியோருக்கு தேடிச்சென்று அவர்களுக்குத் தேவையான அரிசி, மளிகை பொருள், காய்கறிகள் என எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். அதே நேரத்தில் நான் தனிப்பட்ட முறையில் சாலையில் திரியும் விலங்குகளுக்கு உணவு அளித்துவருகிறேன்.
இதனைப் பார்க்கும் தன்னார்வலர்கள் எங்களுக்கு பிஸ்கட், ரொட்டி, பழம் போன்றவற்றை வழங்குகின்றனர். குறிப்பாக திருவள்ளூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் தொடர்ச்சியாக பிஸ்கட், ரொட்டிகளை வழங்கிவருகிறார். இதுபோல் விலங்குகளுக்கு உணவளிப்பதில் அவரும் ஆர்வம் காட்டிவருகிறார். இந்த ஊரடங்கு உத்தரவு காலம் முடியும் வரையில் தொடர்ந்து இதுபோன்ற விலங்குகளுக்கு உணவளிப்போம்” என்றார்.
இதையும் படிங்க: தன்னார்வலர்களை எச்சரித்த மாவட்ட ஆட்சியர்