திருவள்ளூர் அருகே திருத்தணி பகுதியில் போண்டா ராமலிங்கம் தெருவில் வசிப்பவர், சுந்தர்(30). இவர் மேட்டு தெரு பகுதியில் தங்க நகை உருக்கி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று(பிப்.02) காலை வழக்கம் போல் கடையைத் திறந்து வியாபாரம் செய்துள்ளார்.
பின்னர், மதியம் தனது குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்க கடையை மூடிவிட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மதியம் 12:15 மணி அளவில் சுந்தர் கடையில் இருந்து சிலிண்டர் வெடித்து சிதறியது. அப்போது சாலை வழியாக நடந்து சென்ற திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தனுஷ், விஷ்வா, அப்துல் அஸ்ஸலாம், மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த திருத்தணி பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் ஆகிய நால்வருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
தீக்காயத்தால் அலறி துடித்த நான்கு பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நால்வருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய சாலையில் சிலிண்டர் வெடித்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:புதுக்கோட்டை சிறுமி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் போக்சோவில் கைது!