திருவள்ளூர்: கடம்பத்தூர் புதிய வெண்மனம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி. இருவருக்கு விநாயகம் என்பவருடன் திருமணம் நடந்து இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரின் உறவுக்காரரான கடம்புத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமினின் உறவினரான ராஜேந்திரன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சிவகாமியிடம் தனது நிலத்தை விற்பனைச் செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், தனக்கு உதவுமாறு கூறி 3 சவரன் ஆரம், 3 சவரன் நெக்லஸ் என மொத்தம் ஆறு சவரன் நகையை இரண்டு வாரத்திற்குள் திருப்பி தருவதாகக் கூறி பெற்றதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு, நகையை திருப்பி கேட்ட போது ஆறு மாதத்திற்குள் தருகிறேன், ஒரு வருடத்தில் தருகிறேன் என இழுத்தடித்து 3 வருடங்கள் ஆகியும் ராஜேந்திரன் நகையை திருப்பி தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. பின்னர், நகையை ஆறு மாதத்தில் தருவதாகக் கூறி சிவகாமிக்கு பாண்டு பத்திரத்தில் கையொப்பம் போட்டு ராஜேந்திரன் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் ஆறு மாதம் கழித்து நகையைக் கேட்ட போது கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதில் சிவகாமியின் கணவர் விநாயகம் ராஜேந்திரனிடம் நேரில் சென்று நகையை கேட்ட போது தரக்குறைவாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக சொல்லப்படுகிறது. அதன்பின், ராஜேந்திரன் மற்றும் அவருடைய மனைவி கவிதா ஆகிய இருவரும் சிவகாமி வீட்டிற்குச் சென்று சிவகாமியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடம்பத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராஜேந்திரன் மற்றும் அவருடைய மனைவி கவிதா மீது சிவகாமி புகார் கொடுத்து உள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் விசாரணை அறிக்கை மட்டும் பதிவு செய்யப்பட்டு போலீசார் ராஜேந்திரனை அழைத்து பேசி உள்ளனர்.
இதனால் ஆறு மாதத்தில் மீண்டும் நகையை ஒப்படைப்பதாகக் கூறி உள்ளார். ஆனால், சொன்னபடி நகையை தராமல் மீண்டும் ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. சிவகாமி மகள் விஷாலிக்கும் வெள்ளவேடு அடுத்த நேமம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் லோகநாதனுக்கும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடைபெற உள்ளது.
இதனால் மகளுக்கு திருமண சீர்வரிசையாக நகை போடுவதற்கு மீண்டும் ராஜேந்திரனிடம் நகை கேட்ட போது தராமல் ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக கடம்பத்தூர் போலீசார் ராஜேந்திரன் மீது 420, 294(b) 4 ஏமாற்றுதல், ஆபாசமாக பேசியது, பெண்ணிற்கு துன்பம் விளைவித்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிய சிவகாமி மகள் விஷாலியை மர்ம நபர்கள் வழி மறைத்து தேர்தல் வர உள்ளதால் ராஜேந்திரன் மீது கொடுத்த வழக்கை வாபஸ் பெறுங்கள் இல்லையென்றால் உனக்கு கல்யாணம் ஆகாது கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ராஜேந்திரனை கைது செய்து நகையை மீட்டு தரக்கோரியும், தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் குடும்பத்துடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து போலீசார் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியல் போராட்டத்தை மேற்கொண்டதால் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிவகாமி (47), சந்திரா (64 ), அர்ச்சனா (37), திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண் விஷாலி ( 25), வினோத் குமார் (23 ), விக்னேஷ் (27 ), குமுதா (40) ஆகிய 7 பேரையும் திருவள்ளூர் டவுன் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று 147, 143, 294B, 285, 353, 506(2) இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு சட்ட விரோதமாக கூட்டம் சேர்ந்தது, பொது இடத்தில் ஆபாச செயலில் ஈடுபட்டது, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தீக்குளித்து இறப்பேன் என மிரட்டியது, காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின், கைது செய்தவர்களை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஆண்கள் இருவரையும் திருவள்ளூர் கிளைச் சிறையிலும், பெண்கள் 5 பேரை மத்திய புழல் சிறையிலும் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிவகாமி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் நகையைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கடம்புத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரனின் மனைவி கவிதாவை (வயது 45 ) கடம்பத்தூர் போலீசார் கைது செய்தனர்.
அதன்பின், கவிதாவை மத்திய புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த வழக்கில் மோசடி செய்து தலைமறைவாக உள்ள கடம்பத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஃபாலோ டிராஃபிக் ரூல்ஸ்" - பறிமுதல் கார்களை கொண்டு நூதன விழிப்புணர்வு செய்த மதுரை காவல்துறை!