திருவள்ளூர்: மாவட்டம் கொட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகிப்பவர் யுவராஜ் (38). அதிமுகவைச் சேர்ந்த இவர் அக்டோபர் 20 ஆம் தேதி காலை 11 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவருடன் ஊராட்சி செயலாளர் வினோத் (22) பணியிலிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஊராட்சிமன்ற தலைவர் யுவராஜிடம் வீட்டு வரி செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் நீங்கள் யார் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்? என கேள்வி கேட்டுள்ளனர்.
உடனே அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதைப் பார்த்தது அதிர்ச்சியடைந்து வினோத், கூச்சலிட்டு அலுவலகத்திலிருந்து வெளியே ஓடியுள்ளார். வினோத் கூச்சலிட்டதைக் கண்டு உடனே அந்தக் கும்பல் தப்பிச்சென்றது.
இதனைத் தொடர்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யுவராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யுவராஜின் மனைவி கவிதா பாரதி மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மப்பேடு காவல் நிலையம் எதிரில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன், அஜித்குமார், சமத்துவபுரத்தைச் சேர்ந்த நாகராஜ், வளர்புரம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ், ஞானபிரசாத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: வீடியோ: சாலையில் கையேந்தும் காவலர்; வேடிக்கை பார்க்கும் காவல் அலுவலர்!