திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் பகுதியைச் சேர்ந்தவர் தனவேல். வாத்து மேய்க்கும் தொழில் செய்து வரும் இவர், 3500க்கும் அதிகமான வாத்துகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று (டிச.7) இவரிடமிருந்த வாத்துகளில், 3200 வாத்துக்கள் திடீரென உயிரிழந்தன.
இதனைத் தொடர்ந்து, மீஞ்சூர் கால்நடைத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் வந்த கால்நடைத் துறையினர் அங்கு விசாரணை நடத்தினர்.
என்ன காரணத்தால் வாத்துகள் உயிரிழந்தன என அறிய, இறந்த வாத்துகளின் உடல்களை உடற்கூராய்வு செய்தனர். அதில் வாத்துகள் எந்த நோயாலும் தாக்கப்படவில்லை என்றும், குளிரின் தாக்கம் காரணமாக வாத்துகள் உயிரிழந்திருப்பதாக கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து உயிரிழந்த வாத்துகள் அனைத்தும் தனியாக ஓரிடத்தில் புதைக்கப்பட்டன. உயிரிழந்த வாத்துகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அதன் உரிமையாளர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடற்கூராய்வு அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கால்நடைத் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 5 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த குளம்... கிடா வெட்டி கொண்டாட்டம்