திருவள்ளூர்: தமிழ்நாட்டில் பருவ மழை துவங்க உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் அதிவேகமாக நிரம்பி வருகிறது. அந்த வரிசையில், தற்போது பூண்டி ஏரியில் நீரானது முழு கொள்ளளவை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அணையில் மொத்த நீர்மட்ட உயரம் 35 அடியில், தற்பொழுது 34.25 அடி ஆக உயர்ந்து உள்ளதாகவும், நீர் இருப்பு 2 ஆயிரத்து 902 மில்லியன் கன அடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏரிக்கு வரும் நீரின் அளவு 3 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு ஆயிரம் கன அடியில் இருந்து 2 ஆயிரத்து 500 கன அடியாக இன்று காலை 9 மணி முதல் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் கொசஸ்தலை ஆறு கரையோர பகுதிகளில் வசிக்கும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர் சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மேலும் அந்த இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன், கொசஸ்தலை ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் பொது மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.