திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த ரகசிய தகவலின் பேரில் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால் மேற்பார்வையில் காஞ்சிபுரம் போதை பொருள் கடத்தல் பிரிவு துணை கண்காணிப்பாளர் டில்லிபாபு மற்றும் காவல்துறையினர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த 3 பேரை மடக்கி சோதனை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் கஞ்சா கடத்தல்காரர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த காவலர்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூவரும் ஒடிசாவை சேர்ந்த பத்மனாபோயி, தனஞ்ஜெய கரியா, ஹரி ஹர பாகா என்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்தக் கஞ்சாவை தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளான தர்மபுரி, திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக இவர்கள் கொண்டு வந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 3 பேரும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : சென்னையில் பெண் உள்பட ஐந்து கஞ்சா வியாபாரிகள் கைது