திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகேயுள்ள ஆரணி சுப்பிரமணிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்குச் சொந்தமாக குடோன் ஒன்று உள்ளது. இந்தக் குடோனில் ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்திக் கொண்டுவரப்பட்ட புகையிலை, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பதுக்கிவைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனப்படையில், ஆரணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையிலான காவல் துறையினர் ஐயப்பன் குடோனில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
அதேபோல், ஆரணி கேட்டு தெருவைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் மினி லாரியில் புகையிலை, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மினி லாரியை காவல் துறையினர் பறிமுதல்செய்து நித்யானந்தம், நாகராஜ், சரண்குமார், காந்தி ஆகியோரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஐயப்பன் என்பவரைக் காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: குடியாத்தம் திமுக எம்எல்ஏ காலமானார்!