திருவள்ளூர்: மாண்டஸ் புயல் (Mandous Storm) இன்று நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரத்தில் கரையைக் கடக்க கூடும். இதன் காரணமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி மற்றும் புழல் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தின் அளவு 33 அடி உள்ளது. மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனடியில் தற்பொழுது 2521 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. மேலும் மழைநீர் மற்றும் கிருஷ்ணா கால்வாய் மூலம் நீர் வரத்தானது 595 கன அடியாக உள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஏரியிலிருந்து உபரிநீராக மதகு எண் 11லிருந்து திருவள்ளூர் மாவட்ட சப் கலெக்டர் மகாபாரதி அவர்கள் முன்னிலையில் 100 கன அடி நீரை நிர்வாகப் பொறியாளர், பொதுப்பணித் திலகம், உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணன், உதவிப் பொறியாளர் ரமேஷ் மற்றும் பொதுப்பணி துறையினர் திறந்து வைத்தனர்.
அதேபோல் புழல் ஏரி முழு கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்பொழுது 2386 கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 140 கன அடி நீர் வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் புழல் ஏரியிலிருந்து உபரிநீராக 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
புழல் மற்றும் பூண்டி ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தைப் பொறுத்து ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்!