ஆந்திர மாநிலத்தில் இருந்தது செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து திருவள்ளூரில் வைத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக சென்னை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து கடந்த 10 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக ஆய்வு செய்த வனத்துறையினர், இன்று பாப்பரம்பாக்கம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு 6 அடி உயரமும் 30 கிலோ எடையும் கொண்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 10 டன் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் முரளி என்பவருக்கு சொந்தமான கிடங்கில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதும், செங்குன்றத்தைச் சேர்ந்த கதிரவன் என்பவர் தற்போது வாடகைக்கு எடுத்திருப்பதும், இவர் மீது ஏற்கனவே செம்மரக்கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கதிரவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.