திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்தவர் முத்து பெருமாள். இவர் கருங்குளத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலையில் திருநெல்வேலி சிவந்திபட்டி செல்லும் சாலையில், தனது இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் முத்து பெருமாளை வழிமறித்து, ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்து பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, முத்து பெருமாள் கொலை செய்யப்பட்ட தகவலறிந்து வந்த திருநெல்வேலி பெருமாள்புரம் போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட முத்து பெருமாள் உடல், உடற்கூறு ஆய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அங்கிருந்து சிறிது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் அரிவாளில் ரத்தம் படிந்த நிலையில், மூன்று பேர் சுற்றித் திரிவதை பார்த்துள்ளார்.
அப்போது அவர்களை பிடிக்கச் சென்றபோது, மூவரும் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. எனினும், அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் 2 பேரை பிடித்த நிலையில், ஒருவர் மட்டும் தப்பி ஓடி உள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில், 3 பேரும் சேர்ந்துதான் முத்து பெருமாளை கொலை செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
மேலும், தப்பி ஓடிய நபர் குறித்தும் விரிவான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது என்ன காரணத்திற்காக இந்த கொலை நடத்தப்பட்டது, முன்விரோதம் காரணமா என பல கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லை அருகே கோர விபத்து: ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் பலி!