திருநெல்வேலி: பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மகாராஜன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி மகாலட்சுமி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் வெற்றி விஷ்வா, சென்னையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி மரைன் இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணபட்டினம் பகுதியில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் ஒரு வருடம் பயிற்சி பணியில் சேர்ந்துள்ளார்.
அங்கு கடந்த ஆறு மாதமாக பணியாற்றி வரும் நிலையில் கடந்த 7 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு விஷ்வா வீடியோ கால் மூலம் தனது குடும்பத்தினர் அனைவரிடமும் பேசியுள்ளார். அப்போது காலையில் பணிக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தனியார் கப்பல் நிறுவனத்தில் இருந்து பேசிய அதிகாரிகள் உங்களது மகனை காணவில்லை என்ற தகவலை விஷ்வா குடும்பத்திடம் தெரிவித்துள்ளனர். கப்பலில் பணிக்கு சென்ற மகன் எப்படி மாயமானார் என்று கேட்டதற்கு அவர்கள் முறையான பதில் தரவில்லை என கூறப்படுகிறது.
பணிக்கு செல்லும் போது செல்போனையும் எடுத்து செல்லாமல் ரூமில் வைத்து விட்டு சென்றதாகவும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றி விஷ்வாவின் குடும்பத்தினர், இது குறித்து திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனிடம் முறையிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் நயினார் நாகேந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் மாயமான வெற்றி விஷ்வாவின் தந்தை மகாராஜன் கிருஷ்ணபட்டினம் சென்று மகன் குறித்து விசாரிக்க சென்றுள்ளார். அப்போது சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அவரை கப்பலின் உள்ளே விட மறுத்து நாளை வரும்படி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெற்றி விஷ்வாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தனது மகனை மீட்டு தரும்படி ஆட்சியரை சந்தித்து முறையிட முயன்றனர். ஆனால் அவர்களை உள்ளே விட மறுத்த போலீசார், நுழைவு வாசலை இழுத்து மூடினர். இதனால் காவல்துறையினருக்கும், உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கதறி அழுதபடி இருந்த, மூதாட்டி ஒருவர் அங்கிருந்த போலீஸ் அதிகாரியின் காலில் விழுந்தார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகர காவல் துணை ஆணையர் அனிதா, உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பின்னர் குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கியமான பத்து நபர்களை மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுப்பி வைத்தார். எனினும் தங்களுக்கு சரியான பதில் கிடைக்கும் வரை ஆட்சியர் அலுவலகத்தை விட்டு செல்லப் போவதில்லை என கூறி அவர்கள் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.
இதையும் படிங்க: காணாமல்போன பெண் ஊராட்சி மன்ற தலைவர் - முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார்!