திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்த பவுல் பிரின்ஸ் (21), தன்னை சிறப்பு உதவிக் காவல் ஆய்வாளர் சரமாரியாகத் தாக்குவதாகவும் மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (டிச.28) மனு அளித்தார்.
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரின்ஸ் சிங்கம்பாறையில் அமைந்துள்ள புனித சின்னப்பர் திருத்தலத்தின் முன் தனது நண்பர்களோடு நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஜேக்கப் என்பவரின் மகன்கள் ஸ்டான்லி, நிமல் மற்றும் அவரது நண்பர்கள் சுதன், பிரபாகரன் உள்ளிட்டோர் பிரின்ஸிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, தகாத வார்த்தைகளில் பேசிய ஸ்டான்லி மற்றும் அவரது நண்பர்கள், பிரின்ஸை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கிடையே அங்கு வந்த உதவி ஆய்வாளர் ஜேக்கப், தன்னை மட்டுமன்றி தனது நண்பர்களையும் தாக்கிவிட்டு மிரட்டியதாக ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் பிரின்ஸ் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 25ஆம் தேதி சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தாகவும், ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரின்ஸ், ”நான் எந்தத் தவறான வார்த்தைகளையும் பேசவில்லை. ஆனால் நான் பேசியதாகக் கூறி எங்கள் ஊரில் வசிக்கும் உதவி ஆய்வாளர் என்னை துன்புறுத்துகிறார். அவர் தாக்கியத்தில் எனது வாயில் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.
அவரது மகன்களுக்கு என்னைக் காணப்பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் நடமாடும் பகுதிகளில் என்னை செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகிறார். இது தொடர்பாக எங்கள் ஊர் தலைவர்களிடம் பேசியும் எந்தப் பலனும் இல்லை. காவல் துறையினரும் அவருக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர். எனக்கு நீதி வேண்டும் என்பதற்காக ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். இனியாவது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்”என்றார்.
இதையும் படிங்க:சிறுமிகளைக் கடத்திய அதிமுக பிரமுகரின் மகன் கைது