நெல்லை பாளையங்கோட்டை கீழ யாதவர் தெருவில் வசித்துவந்த எழுத்தாளர் தொ. பரமசிவன் (70), சிறு வயது முதலே பெரியார் கொள்கைகள் மீது ஒருவித ஈர்ப்புடன் இருந்தார். முதுகலை தமிழ் படித்தவர், தமிழ் மீதும் தமிழ்நாட்டு வரலாறு மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
அழகர் கோயில் நூல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்றபோதே வரலாற்று ஆய்வில் ஈடுபட்டார். பல்வேறு பண்பாட்டு நூல்களை எழுதத் தொடங்கினார். இவர் எழுதிய அழகர் கோயில் என்ற நூலை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வெளியிட்டது தொ. பரமசிவன் வாழ்க்கையில் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது.
அதாவது இதுவரை எந்தப் பல்கலைக்கழகமும் முனைவர் பட்டம் பயிலும் மாணவர் எழுதிய நூலை வெளியிட்டது கிடையாது. தொடர்ந்து கிராமத்துக் கோயில்களின் வரலாறு குறித்து நூல்கள் எழுதினார்.
சிறு தெய்வ வழிபாடு
குறிப்பாக சிறு, சிறு பண்பாட்டுக் கூறுகளை அறியப்படாத தமிழகம் என்ற நூலில் விளக்கியுள்ளார். அதேபோல் கிராமத்து தெய்வங்கள் குறித்தும், ஊர் பெயர்கள் குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுரையாக எழுதியுள்ளார். தெய்வமும் சமூக உறவுகளும் என்ற நூலில் சிறு தெய்வ வழிபாடு குறித்து எழுதியிருப்பார்.
நூல்கள்
பண்பாட்டு அசைவுகள், விடு பூக்கள், பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை என இதுவரை 16 நூல்களை எழுதியுள்ளார். இதுதவிர பல்வேறு பதிப்பகங்களுக்கு ஆய்வு கட்டுரைகளை எழுதி கொடுத்துள்ளார். நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பேராசியராகவும் தமிழ்த் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
கடவுள் இருந்தால் நல்லா இருக்கும்
பெரியார் கொள்கை மீது அதிக ஈர்ப்புகொண்ட தொ. பரமசிவன் தனது நூல்களில் திராவிட கருத்துகளோடு சமூகத்தில் பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இவர் கூறிய, 'கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நல்லா இருக்கும்' என்ற வசனத்தை நடிகர் கமல்ஹாசன் தனது திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்.
தொ.ப.
கமலுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளராகவும் தொ. பரமசிவன் இருந்துவந்தார். இவரது தந்தை பெயர் தொப்பாதாஸ். இவரது நூல்கள் மீதும் எழுத்து மீதும் ஈர்ப்புகொண்ட வாசகர்கள், சக எழுத்தாளர்கள் இவரைச் செல்லமாக தொ.ப. என்று அழைத்தனர். பெரும்பாலும் தொ.ப. என்றே அறியப்பட்டார்.
எழுத்துலகில் தனி முத்திரை பதித்த தொ.ப. கடந்த ஐந்து ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கினார். ரத்த அணுக்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வலது கால் வெட்டி எடுக்கப்பட்டது.
காலமானார் தொ.ப.
இதனால் வீட்டில் ஒரு கட்டில், அதன் அருகில் கழிவறை என 20 அடிக்குள் தொ.ப. படைப்புத்திறன் தடைப்பட்டுக் கிடந்தது. இந்தச் சூழலில்தான் நேற்று (டிச. 24) மாலை அதிக சளி காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படவே உறவினர்கள் தொ. பரமசிவனை பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சைப் பலனில்லாமல் இரவு 7.45 மணிக்கு தொ.ப. உயிர் பிரிந்தது.
இந்தச் செய்தி கேள்விப்பட்டு எழுத்தாளர்கள், பெரியார் சிந்தனையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொ.ப. உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், எழுத்தாளர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
பெரியார் பற்றாளர்
இதற்கிடையில், பெரியார் மீது பற்றுகொண்ட தொ. பரமசிவன், பெரியாரின் நினைவுநாளான நேற்று காலமானது சக பெரியார் சிந்தனையாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிச் சடங்கு
உயிரிழந்த தொ. பரமசிவனுக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், மாசான மணி என்ற மகனும், விஜயலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் நடக்கிறது. இதற்கிடையில் மே 17 இயக்க ஒருஙகிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மறைந்த தொ.ப. உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.