திருநெல்வேலி: கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள் உட்பட அரசு அலுவலகங்களும் நீரில் மூழ்கி ஆவணங்கள் அனைத்தும் சேதமடைந்தன. இந்நிலையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காகத் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளைக் காய வைக்கும் பணியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த டிச.17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய பகுதிகளில் அதி கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், தாமிரபரணி ஆற்றில் லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெள்ளமாகச் சென்ற நிலையில், தாமிரபரணி கரையை ஒட்டி இருந்த பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது.
குறிப்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களும் தண்ணீரில் மூழ்கின. இதனால் அலுவலகத்திலிருந்த ஆவணங்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்துள்ளன.
இந்நிலையில், தற்போது வாக்காளர்கள் அடையாள அட்டைகளைக் காயவைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கனிம வளத் துறை அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆவணங்களைக் காயவைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பொதுமக்களுக்கு வழங்குவதற்காகத் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளும் மழை வெள்ளத்தால் நனைந்து சேதம் அடைந்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகே பக்கெட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த வாக்காளர் அடையாள அட்டைகளைக் காய வைக்கும் பணியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.