திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (30). இவர் நேற்று (ஜன.31) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர், பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்கச் சென்றபோது காவலர்கள் தன்னை தரக்குறைவாக திட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்த தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உடனடியாக விசாரணை மேற்கொண்டார். அதில் பேச்சியம்மாளுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரின் குடும்பத்திற்கும் நீண்ட நாளாக இடப்பிரச்சனை இருந்து வருவது தெரியவந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், பேச்சியம்மாள் திடீரென தனது கணவர் வெயிலுமுத்துவுடன் தமிழ்செல்வி வீட்டிற்கு சென்று அங்கிருந்த இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியதுடன் சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தியுள்ளார்.
உண்மை அம்பலம்
இதுகுறித்து சுத்தமல்லி காவல்துறையினர் பேச்சியம்மாளிடம் விசாரித்துள்ளனர். தன் மீது தவறு இருப்பதை உணர்ந்த பேச்சியம்மாள் இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் மீது பழியைபோட்டு தற்கொலை நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்பேரில் பேச்சியம்மாளை காவல்துறையினர் கைது செய்தனர். பேச்சியம்மாள் மற்றும் அவரது கணவர் வெயிலுமுத்து தமிழ்ச்செல்வி வீட்டிற்கு சென்று இருசக்கர வாகனம் மற்றும் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நாகையில் 500 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல்