திருநெல்வேலி: விவசாயப்பணிகளுக்காக நெல்லை மாவட்டம், பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று (நவ.04) பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு, அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச்சந்தித்துப்பேசினார்.
அப்போது பேசிய அவர், 'பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 86.107 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். இன்று முதல் 148 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது விநாடிக்கு ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
விவசாயப்பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாகப்பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வெள்ள நீர் கால்வாய் திட்ட பரிசோதனைக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி விவசாயிகளுக்கான ஆட்சி.
எனவே, ஒருபோதும் வெள்ளநீர் கால்வாய் பரிசோதனைக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாது. மழைக் காலத்தில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வைத்தே பரிசோதனை மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு