திருநெல்வேலி மாவட்டத்தின், பிரதான அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய மூன்று அணைகளை நம்பி சுமார் 80 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த அணைகளிலிருந்து ஆண்டுதோறும் கார், பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், சமீபத்தில் பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல், மணிமுத்தாறு அணையின் ஒன்று, இரண்டாவது கால்வாயிலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மணிமுத்தாறு அணையிலிருந்து இன்று(டிச.09) பிசான சாகுபடிக்காக மூன்று, நான்காம் கால்வாயிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கலந்துகொண்டு மதகுகளை திறந்து வைத்தனர்.
முன்னதாக, விவசாயம் செழிக்க வேண்டி அணையில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அணையிலிருந்து தற்போது 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்தைப் பொறுத்து கூடுதல் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தார். மொத்தம் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில், தற்போது 102 அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 992 கனஅடி தண்ணீர் வருகிறது. இன்று(டிச.09) தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் மணிமுத்தாறு அணையை நம்பி உள்ள சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
இதையும் படிங்க: 'பாபநாசம் அணையில் இறந்த மீன்களை அப்புறப்படுத்தி தூர்வார வேண்டும்..!' - எம்பி கனிமொழி