திருநெல்வேலி: மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருச்செந்தூர் கோயில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த விஷ்ணுசந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அவர் இன்று (ஜூன்.16) திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக பதவியேற்றுக் கொண்டார் .
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் 2015ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்தேன். பின்னர் தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளேன். வருவாய்த் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் என்பது புதிதாகும்.
திருநெல்வேலி மாநகராட்சியைப் பொறுத்தவரை பாதாளச்சாக்கடை திட்டம், ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் காலதாமதமாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பழுதடைந்த சாலைகள், குடி தண்ணீர் பிரச்னை என மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு அதி முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன்.
தொடர்ந்து ஊழலற்ற மாநகராட்சி நிர்வாகம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தின் முக்கிய நதியான தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாவட்டத்தில் பண்பாடு, கலாச்சாரத்தைப் பாதுகாக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படும். பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும்” என்றார்.