திருநெல்வேலி டவுன் நேதாஜி மார்க்கெட்டில் சுமார் 300 கடைகள் செயல்பட்டுவந்தன. இதில் 180 கடைகள் நிரந்தர கடைகளாகவும், 120 கடைகள் நடைபாதை கடைகளாகவும் உள்ளன.
அங்கு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த மார்க்கெட்டை இடித்துவிட்டு நவீன முறையில் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு கடைகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளனர்.
இதனிடையே ஊரடங்கு காரணமாக தகுந்த இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் மாநகராட்சி நிர்வாகம் நேதாஜி மார்க்கெட்டை மூடிவிட்டு, அங்குள்ள கடைகள் இரண்டாக பிரிக்கப்பட்டு மாநகராட்சி பொருட்காட்சி மைதானத்திலும், கண்டியபெரி உழவர் சந்தையிலும் தற்காலிகமாக மார்க்கெட்டை அமைத்துக் கொடுத்தது.
இந்நிலையில் மாநகராட்சி அலுவலர்கள் பொருட்காட்சி மைதானத்திற்கு சென்று அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டப்பட இருப்பதால் கடைகளை காலி செய்ய வேண்டும் என கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
இதனை வியாபாரிகள் வாங்க மறுத்த நிலையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால் மாநகராட்சி நிர்வாகம், கடைகளை காவல் துறை உதவியுடன் காலி செய்தது.
மாநகராட்சி நிர்வாகம் முறையான மாற்று இடம் செய்து தராமல் காலி செய்ததை கண்டித்து நேதாஜி காய்கறிகள் வியாபாரி சங்கம் இன்று ஒருநாள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாநகராட்சி சார்பில் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் அனைத்து மாநகராட்சி ஆணையர் கண்ணன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முடிவில் காய்கறி வியாபாரிகள் தங்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.