திருநெல்வேலி: பழமையான வைணவ தலங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். கோயிலின் முகப்பு பகுதியில் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரமும் உட்பிரகாரத்தில் கல்மண்டபமும் உள்ளன.
கோபுரம், கல்மண்டபத்தில் 100-க்கும் மேற்பட்ட புறாக்கள் உள்ளன. புறாக்களின் எச்சம், சிறகுகளால் பக்தர்கள் சிரமப்படுவதாக அங்குள்ள பணியாளர்கள் கூறிவந்ததாக தெரிகிறது.
நேற்று (நவ. 28) வேட்டையாடுபவர்களை வைத்து புறாக்கள் வேட்டையாடப்பட்டதாக கூறப்படுகிறது. சாக்கு பையில் உயிரிழந்த புறாக்களை போட்டுக் கொண்டு வேட்டையாடுபவர்கள் கோயிலின் வெளியே வந்துள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோயில் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோயில் நிர்வாகம் தரப்பில் ஈடிவி பாரத் செய்தியாளர் கேட்டபோது, உரிய விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பாஜக நிர்வாகி கூறுகையில், சமாதானத்தை வலியுறுத்தும் ஒரு உயிரினம் புறா, அதை கொன்றுள்ளனர் என குற்றஞ்சாட்டினார். ஆகம விதிப்படி ஜீவராசிகளை கொல்லக் கூடாது எனவும் உரிய பரிகார பூஜை நடத்திய பிறகே கோயிலை திறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன உத்தரப்பிரதேச பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு