திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது, நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட திருவேங்கடநாதபுரம், மேலப்பாட்டம் ஆகிய பகுதிகளில் திண்ணை பரப்புரையில் ஈடுபட்டார்.
அங்கு கூடியிருந்த பெண்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரியில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. அங்கும் திமுக வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது எனக் கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் பெயர் என்ன என்பதே மக்களில் பலருக்கும் தெரியாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த எட்டு வருட அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதுதான் உண்மை என பேசினார்.
மேலும், 'எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்படுகிறது. இது மிகப்பெரிய கொடுமை. நீட் தேர்வால் டாக்டர் ஆகவேண்டிய அனிதாவை கொலை செய்துவிட்டு முதலமைச்சர்க்கு டாக்டர் பட்டம் தேவையா?' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கெல்லாம் பாடம் புகட்ட இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியை வெற்றியடைய செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'என்னைப் பார்த்து சிரித்ததால்தான் ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவி பறிபோனது' - ஸ்டாலின்