நெல்லை மாநகர பகுதியில் வழிப்பறி மற்றும் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த கார்த்திக், நெல்லை டவுன் காவல்பிறை தெருவைச் சேர்ந்த சீனி மாரியப்பன் ஆகிய இருவர்தான் பெரும்பாலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது கண்டிபிடிக்கப்பட்டது.
இதனால், இவர்கள் இருவரும் காவல்துறையினர் கண்ணில் படாமல் சில ஆண்டுகளாக டிமிக்கி காட்டி வந்தனர். இதையடுத்து இருவரின் புகைப்படங்களையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு நெல்லை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
இந்தச் சூழ்நிலையில் இன்று (டிச.26) பாளையங்கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆதம் அலி தலைமையிலான தனிப்படை காவலர்கள் நெல்லை அருகே பதுங்கி இருந்த கார்த்திக், சீனி மாரியப்பன் ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில், நெல்லை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியபடி இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்த்து.
மேலும், இவர்கள் மீது நெல்லை, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதும் தெரியவந்தது.
நீண்ட நாளாக டிமிக்கி கொடுத்து வந்த கொள்ளையர்களை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆதம் அலி பல்வேறு யுக்திகளை கடைபிடித்து மடக்கிப்பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: வாகன சோதனையில் ஒன்றரை கிலோ கஞ்சா, வாள் பறிமுதல்!