நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் இரண்டு காவலர்கள் நெல்லை பேருந்து நிலையத்தில் ஏறினர். பேருந்து நடத்துநர் ரமேஷ், அவர்களிடம் பேருந்தில் பயணம் செய்வதற்கான அனுமதிச்சீட்டை (வாரண்ட்) காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.
அதற்கு காவலர்கள் இருவரும் பதில் அளிக்கவில்லை. மற்ற பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்துவிட்டு மீண்டும் அவர்களிடம் ரமேஷ் பயணம் செய்வதற்கான அனுமதிச்சீட்டை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் அவரது முகத்தில் கடுமையாகத் தாக்கினர். இதனால் ரமேஷ் முகத்தில் ரத்தம் வழிந்தது.
இச்சம்பவம் தொடர்பாக ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காவலர்கள் இருவரும் நெல்லை ஆயுதப் படையில் பணியாற்றிவருவது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் துறை ரீதியாக காவலர்கள் மீது விசாரணை நடத்திவருகின்றார்.
தாக்குதலில் காயமடைந்த நடத்துநர் ரமேஷ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக வெட்டிக் கொலை... சக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்...