நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்தாண்டு காதல் திருமணம் செய்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால் குறிச்சியைச் சேர்ந்த நம்பிராஜன் அதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் என்பவரது மகள் வான்மதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதனால், நம்பிராஜன் குடும்பத்தினருக்கும் தங்கபாண்டியன் குடும்பத்தினருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டது. காதல் திருமணம் செய்துகொண்ட நம்பிராஜன் வான்மதி தம்பதி நெல்லையில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 26ஆம் தேதி நம்பிராஜன் நண்பர்கள் முத்துப்பாண்டி மற்றும் செல்லத்துரை ஆகியோர் நெல்லை சென்று மதுகுடிப்பதற்காக நம்பிராஜனை அழைத்துச் சென்று கொலை செய்து ரயில்வே பாதையில் வீசிச் சென்றனர்.
இதுதொடர்பாக நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நம்பிராஜனை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம் நாங்குநேரி அண்ணா சிலை அருகே உணவகம் நடத்தி வருகிறார். நேற்றிரவு 8 பேர் கொண்ட கும்பல் அந்த உணவகத்திற்குள் நுழைந்து ஆறுமுகம் அவரது உறவினர் சுரேஷ்(20) ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆறுமுகம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த இரட்டைக் கொலை சம்பவத்தை தொடர்ந்து நாங்குநேரியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்படுள்ளனர்.
பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காக நடந்ததா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறால் பெண் மீது ஆசிட் வீசிய மூதாட்டி!