திருநெல்வேலி: சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த கண்ணன்-மாரியம்மாள் தம்பதிக்கு நிரஞ்சனி ( 7 மாதம்) மாதுரி தேவி (4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்களுடன் மாரியம்மாள் சுத்தமல்லி அணைக்கட்டு பகுதியில் குளிப்பதற்காகச் இன்று (அக். 1) சென்றுள்ளார்.
அப்போது, குழந்தைகள் இருவரும் தவறுதலாக ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. உடனே குழந்தைகளை காப்பாற்ற மாரியம்மாளும் தண்ணீரில் குறித்துள்ளார். மூன்று பேரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதை கவனித்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் முன்னீர்பள்ளம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மாரியம்மள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அவரது ஏழு மாத குழந்தை நிரஞ்சனி, உயரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இறுதியாக நான்கு வயது குழந்தை மாதுரி தேவி உயிருக்கு போராடிய நிலையில் மீட்கபட்டு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாதுரி தேவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தாய் கண் முன்பே இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாரியம்மாளை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரியம்மாள் விசாரணையின் போது, குழந்தைகள் அணைக்கட்டை பார்க்க வேண்டும் என விரும்பியதால் அங்கு சென்றபோது கால் தவறி குழந்தைகள் தண்ணீரில் விழுந்தாகவும் அவர்களை காப்பாற்றும் போது தானும் விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மேலும் தற்கொலை செய்யும் நோக்கில் குழந்தைகளை தண்ணீரில் தூக்கி வீசிவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மாரியம்மாளின் கணவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளிக்கரணை கொலை சம்பவம்...5 கல்லூரி மாணவர்களின் வாக்குமூலம்...ஒருவர் தலைமறைவு