திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள காரையாறு, மணிமுத்தாறு, சேர்வலாறு, இஞ்சிகுழி உள்ளிட்ட பகுதிகளில் கானி பழங்குடி இன மக்கள் குடும்பத்துடன் வசித்துவருகின்றனர்.
இவர்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் படும் துன்பம் சொல்லிமாளாது.
நெட்வொர்க் இல்லை
கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. காரையாறு, மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதி என்பதால் இங்கு செல்போன் டவர் அமைக்க அரசு அனுமதிக்கவில்லை.
இதற்கிடையில், செல்போனில் நெட்வொர்க் கிடைக்காததால் அப்பகுதிகளில் வசித்துவரும் மாணவ-மாணவிகள் ஆன்லைன் கல்வியைக் கற்க முடியாமல் திணறிவருகின்றனர்.
ஆன்லைன் தேர்வு
சேர்வலாறு, கானி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், செல்போன் டவர் கிடைக்காததால், நடந்தே சென்று ஆன்லைன் தேர்வு எழுதிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேர்வலாறு, கானி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரம்யா. இவர் வசிக்கும் பகுதியில் கல்லூரி பயிலும் ஒரே மாணவி ரம்யாதான். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துவரும் மாணவி ரம்யாவுக்கு, ஆன்லைன் மூலமாகப் பருவத்தேர்வு நடைபெற்றுவருகிறது.
நடந்துசென்று தேர்வெழுதிய மாணவி
அவர் வசிக்கும் பகுதியில் சரியாக நெட்வொர்க் இல்லாததால், மாணவி ரம்யாவால் தேர்வு எழுத முடியவில்லை. இதனால் மனமுடைந்த ரம்யாவிற்கு, சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ள லோயர் டேம் பகுதியில் செல்போன் டவர் கிடைப்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
தகவலறிந்து உற்சாகமான ரம்யா தேர்வெழுத தயாரானார். ஆனால், பேருந்து வசதியில்லாததால், மாணவி ரம்யா நடந்தே செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.
கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?
தேர்வெழுதும் உத்வேகத்தில் 6 கி.மீ. நடந்துசென்ற ரம்யா, அங்கிருந்த சாலைக்கு அருகே அமர்ந்து தேர்வெழுதினார். இந்த அவலம் மேலும் தொடராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, கானி குடியிருப்புப் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க:சோலைவனத்தில் செழித்து வளரும் பாலைவனப் பயிர்: அசத்தும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்