நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே நேதாஜி நகரைச் சேர்ந்தவர்கள் முருகன் (55), ராமையா (70). இவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்துவந்தனர். தினமும் கங்கைகொண்டான் அருகே நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் புல்வெளியில் ஆடுகளை மேய்ப்பது இவர்களது வழக்கம்.
அந்த வகையில் இன்று (டிச. 17) இருவரும் ஆடுகளை மேயவிட்டு சாலை ஓரம் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த மாருதி ஈகோ கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையைத் தாண்டி, அமர்ந்திருந்த முருகன், ராமையா மீது மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து கங்கை கொண்டான் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த வேலாயுதபுரம் முதல் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (32) என்பவர் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் இட்டமொழியில் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது காரை ஓட்டிய செல்வராஜ் கண் அயர்ந்து தூங்கியதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து செல்வராஜிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஓட்டுநரின் அலட்சியத்தால் தொழிலாளிகள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆவடியில் பைக் மீது வேன் மோதி விபத்து - பொறியாளர் உயிரிழப்பு!