திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இவைகள் தச்சநல்லூர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, மேலப்பாளையம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பிரிக்கப்பட்ட மண்டலங்களில் மேலப்பாளையம் மண்டலத்தில் 14 வார்டுகள் இருந்தன. இதில் முன்பு இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் மேலப்பாளையம் ஊருக்குள் 10-வார்டுகளும், அதனைச் சுற்றியுள்ள பகுதியில் நான்கு வார்டுகளும் இருந்தன.
குறைகிறதா இஸ்லாமியர்களுக்கான பிரதிநிதித்துவம்:
கடந்த அதிமுக ஆட்சியில் வார்டு மறு வரையறை செய்யும் போது, மேலப்பாளையத்தில் உள்ள பத்து வார்டுகளை, ஏழு வார்டுகளாக குறைத்து சுற்றியுள்ள நான்கு வார்டுகளை ஏழு வார்டுகளாக உயர்த்தியுள்ளனர்.
இதனால் திருநெல்வேலி மாநகராட்சியில் இஸ்லாமியர்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாக இருக்குமாறு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
இதனைக் கண்டித்து இன்று (நவ. 22) மேலப்பாளையம் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் கடையடைப்புப் போராட்டத்தால் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மேலப்பாளையம் பகுதி, தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் 63 மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைக்க பரிந்துரை!